மத்திய கிழக்கில் இடம்பெற்ற மிக மோசமான இனப்படுகொலைகளில் ஒன்றான பார்சானி இனவழிப்பு நினைவு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) பிரதிநிதி பங்கேற்று ஆலோசனை உரை ஆற்றியுள்ளார்.
பூகம்ப அரசியல் மாற்றங்களை மத்திய கிழக்குப் பிராந்தியம் எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழமைவில் 1983ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய பார்சானி இனப்படுகொலைகளுக்கு நீதிபெறுவது பற்றிய மாநாடு 09.12.2024 திங்கட்கிழமை பார்சான் பிராந்தியத்தில் இடம்பெற்றது.
இம் மாநாட்டிற்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச அரசறிவியலாளர்கள் அணியில் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா இடம்பெற்றிருந்தார்.
இந் நிகழ்வில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி உரையாற்றுகையில், பார்சானி படுகொலைகளுக்கு நிகராகத் தென்தமிழீழத்தில் 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறீலங்கா ஆயுதப் படைகளாலும், அதன் துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட 3,000 தொடக்கம் 6,000 வரையான தமிழர்களின் படுகொலைகளை ஒப்பிட்டிருந்தார்.
அக்காலப் பகுதியில் தென்தமிழீழத்தில் தமிழ்க் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டமை, வேரோடு தமிழ்க் குடும்பங்கள் கொன்று குவிக்கப்பட்டமை மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களைத் தெரிவு செய்து அவர்களை சிறீலங்கா ஆயுதப் படைகளும் அதன் துணைப்படைகளும் படுகொலை செய்தமை பற்றியும் தனது உரையில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி சுட்டிக் காட்டியிருந்தார்.
மேலும், அரசியல் சுதந்திரம் பெறாத ஒடுக்கப்படும் தேசங்கள் தொடர்ந்தும் இனப்படுகொலைகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கூட்டாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
கொதிநிலையில் உள்ள மத்திய கிழக்கில் இனப்படுகொலை பற்றிய சர்வதேச மாநாடு ஒன்றில் பிரத்தியேகமாகவும், முதற் தடவையாகவும் தென்தமிழீழப் படுகொலைகள் பற்றிய விழிப்பூட்டல், தேசத்தின் புதல்வியின் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் (WTCC) ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.