தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் அரசியல் வழிகாட்டலில் இயங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழத் தேசியக் கொடியை உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரான வாசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மணியொலி எழுப்பித் துயிலும் இல்லப் பாடல் இசைக்க, முதன்மைச் சுடரினை மாவீரன் கப்டன் அருண் (ஏரம்பு பாலச்சந்திரன்) அவர்களின் சகோதரியும், தமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனியும் ஆகிய அருணா ஏரம்பு அவர்கள் ஏற்றி வைக்க, சமநேரத்தில் மண்டபத்தில் திரண்டிருந்த செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உரித்துடையோர் மற்றும் தமிழீழத் தேசாபிமானிகளால் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையினை உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ப.யோகச்சந்திரன் அவர்கள் படித்தளித்தார்.
சிறப்புரையினைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை 2024 ஆவணி மாதம் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிற்சர்லாந்து கிளைப் பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் ஆற்றினார்.
இதன்போது தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து சுவிற்சர்லாந்திலும், ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் தேசவிரோதிகளால் முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கைகள் பற்றியும், 2024ஆம் ஆண்டு ஆவணி மாதம் தமிழீழத் தேசியத் தலைவரைத் தான் சந்தித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் தன்னுடன் தமிழீழத் தேசியத் தலைவர் கலந்துரையாடிய விடயங்கள் குறித்தும் தனது உரையில் ரகுபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ‘விலங்கை உடைத்து’ என்ற வரலாற்று நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சுவிற்சர்லாந்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளின் தாய் அமைப்பாக விளங்கும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.